பாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் அமைக்கும் பணி மும்முரம்


பாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 21 July 2019 3:30 AM IST (Updated: 21 July 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நெல்லை,

தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இடம், பாபநாசத்துக்கு மேல் உள்ள பொதிகை மலையாகும். இந்த பொதிகைமலை அருகே தான் பாபநாசம் அணை உள்ளது. இதன் அருகில் பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மின்சாரம் உற்பத்தியாகும் சேர்வலாறு அணை, முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன.

இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டுமானால் பாபநாசத்தில் இருந்து மலைப்பாதையில் செல்ல வேண்டும். இந்த மலைப்பாதையில் முண்டந்துறை என்ற இடத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1938-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாகத்தான் அரசு மற்றும் தனியார் பஸ்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்று வந்தன.

கடந்த 1992-ம் ஆண்டு பெய்த கனமழையால் பாபநாசம் அணையில் இருந்தும், காட்டுப்பகுதியில் இருந்தும் அதிகளவில் வெள்ளம் வந்தது. அப்போது முண்டந்துறை ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்துக் கொடுத்தது. இந்த இரும்பு பாலத்தின் வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மழை காலங்களில் இந்த இரும்பு பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடும். அந்த நேரத்தில் பாலத்தில் போக்குவரத்து தடைபடும்.

இதனால் அந்த இடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.5½ கோடியும், அதன் அருகில் சாலைகள் அமைக்க ரூ.1½ கோடியும் என மொத்தம் ரூ.7 கோடியில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அரசு கடந்த 2018-ம் ஆண்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்து வந்தது. ஆனால் இடையில் பாலம் கட்டும் பணி மந்தமாக நடந்தது. பாலம் கட்டும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கலெக்டரிடமும் மனு கொடுத்தனர்.

இதையடுத்து புதிய பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அனைத்து தூண்களும் அமைக்கப்பட்டு அதில் கான்கிரீட் போடப்பட்டு பாலத்தின் மேல் தளம் அமைக்கும் பணி முடிந்து விட்டது. பாலத்தின் முன்பக்கம், பின்பக்கம் உள்ள பணிகள் மட்டுமே வேகமாக நடந்து வருகிறது. இந்த புதிய பால பணி இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story