தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 3,500 இளைஞர்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 3 ஆயிரத்து 500 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடத்தியது. முகாமில் தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் 75 பிரபல தனியார் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். முகாமில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரி, என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்தனர்.
முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்கும் முகாம், வெளிநாடுகளில் வேலை தேடுபவர்கள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பதிவு செய்யும் முகாம் நடந்தது.
தொடர்ந்து முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 700 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வீரபாகு பேசினார். முடிவில் மகளிர் திட்டம் இணை இயக்குனர் ரேவதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம், முதல்வர் வீரபாகு, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மரிய நேவிஸ் சோரீஸ், பேராசிரியர் ஐசக் பாலசிங் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story