தஞ்சை வெண்ணாற்றில் பழங்கால நாணயங்களை தேடும் விவசாய தொழிலாளர்கள்


தஞ்சை வெண்ணாற்றில் பழங்கால நாணயங்களை தேடும் விவசாய தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 21 July 2019 4:00 AM IST (Updated: 21 July 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை வெண்ணாற்றில் பழங்கால நாணயங்களை தேடும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

நாணயம் என்பது வணிக பொருளாக மட்டுமின்றி அது வெளிவந்த காலத்தின் நாகரிகம், பொருளாதாரம், கலாசாரம், வரலாற்று தகவல்களை தெரிவிக்கும் ஊடகமாக திகழ்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருமே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும், புலி, மீன், குதிரை, காளைமாடு, சிங்கம் போன்ற விலங்குகள், பறவைகள், சமயம் சார்ந்த உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.

நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னரின் நாட்டு எல்லை, வணிகத்தொடர்பு முதலியவற்றை கணிக்கலாம். பழங்கால நாணயங்கள் புதையலாகவோ, ஆராய்ச்சிகளின்போதோ கிடைத்து வருகிறது. மேலும் ஆறுகளிலும் அரியவகை நாணயங்கள் கிடைக்கின்றன. இத்தகைய அரியவகை நாணயங்களை தேடும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரிடெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. இதனால் வேலையின்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்கள், வருமானத்திற்காக ஆற்றுமணலில் புதைந்துள்ள நாணயங்கள், தங்கம், வெள்ளிப்பொருட்களை சேகரித்து அதை விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை பள்ளியக்கிரஹாரத்தில் உள்ள வெண்ணாற்றில் விவசாய தொழிலாளர்கள் மண்வெட்டியை கொண்டு சிறிய அளவில் குழி தோண்டி, பின்னர் சல்லடைகளை கொண்டு ஆற்றுமணலை சலித்து பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியின்போது தங்கமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் காலை முதல் மாலை வரை இப்பணியில் ஈடுபட்டாலும் பொருட்கள் கிடைக்காமலும் போகும்.

அரியவகை நாணயங்கள் கிடைத்தால் அதை விலைக்கு வாங்கி செல்வதற்காக நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வலர்களும், மாணவர்களும் இவர்களை வந்து சந்திப்பார்கள். அப்போது ஒரு நாணயத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்கி செல்வார்கள்.

இது குறித்து விவசாய தொழிலாளர்கள் கூறும்போது, முன்பெல்லாம் அறுவடை காலம் முடிந்தபின்னர் ஆறுகளில் பழங்கால நாணயங்கள், பொருட்களை தேடும் பணியில் ஈடுபடுவோம். ஆனால் இப்போது சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வராத காரணத்தினால் பிழைப்புகாக தினமும் இப்பணியில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியை செய்தாலும் சில நேரங்களில் எதுவும் கிடைக்காமல் போகும்.

அப்போது ஏமாற்றம் தான் மிஞ்சும். ஆறுகளில் குளிக்கும்போது தங்கசெயின் போன்றவற்றை தவறவிட்டுவிடுவார்கள். அது மணலுடன் கலந்து கிடக்கும். அந்த தங்கசெயின் சில நேரங்களில் கிடைக்கும். அப்படி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பழங்கால நாணயங்களை கண்காட்சியில் வைப்பதற்காக மாணவர்கள் வாங்கி செல்வார்கள் என்றனர்.

இது குறித்து பழங்கால நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வலர்கள் கூறும்போது, பல்வேறு மன்னர்கள் ஆட்சியின்போது வெளியிடப்பட்ட காசுகள் வாயிலாக தமிழகவரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களில் காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. காசுகள் சதுரம், நீண்டசதுரம், வட்டம் போன்ற வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பழங்கால நாணயங்கள் ஒவ்வொன்றும் அரிய பொக்கிஷமாகும். மணலில் புதைந்து கிடக்கும் அவற்றை அரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் கிடைக்கும் நாணயங்கள் கடைக்கு போட்டு உருக்கக்கூடிய நபர்களின் கையில் கிடைக்கக்கூடாது. நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வலர்களான எங்களது கையில் கிடைக்க வேண்டும் என்றனர்.


Next Story