துரைப்பாக்கம் கண்ணகிநகரில் ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தி பணம் திருட முயற்சி 3 பல்கேரியா வாலிபர்கள் கைது
துரைப்பாக்கம் கண்ணகிநகரில் ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தி பணம் திருட முயன்றதாக பல்கேரியா நாட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையில் கண்ணகிநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்குள்ள தனியார் ஏ.டி.எம். மையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வெளிநாட்டை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், பல்கேரியா நாட்டை சேர்ந்த நெக்கோலேய்(வயது 32), போரீஸ்(29), லுயுபேமீர்(30) என்பது தெரிந்தது.
ஏ.டி.எம்.மில் பணம் திருட முயற்சி
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவர்கள், காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். கண்ணகிநகர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவியை பொருத்தி, வெளிநாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கண்ணகிநகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள இந்திய பணம் மற்றும் பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள், ‘ஸ்கிம்மர்’ கருவி, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
பின்னர் கைதான 3 பேரையும் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கண்ணகிநகர் போலீசார் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையிலான போலீசார் பல்கேரியா நாட்டை சேர்ந்த 3 பேரிடமும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story