புதிதாக அமைக்கப்பட்ட தெரு குழாய்கள் திறப்பு விழா: குழாயில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்


புதிதாக அமைக்கப்பட்ட தெரு குழாய்கள் திறப்பு விழா: குழாயில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 July 2019 3:52 AM IST (Updated: 21 July 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் புதிதாக அமைக்கப்பட்ட தெரு குழாய்கள் திறப்பு விழா நடந்தது. ஆனால் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மேற்கு பகுதி 6-வது வார்டுக்கு உட்பட்ட முருகப்பா நகர் காட்டு பொன்னியம்மன் நகர் பகுதிகளில் தெரு குழாய்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்டதூரம் சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அப்பகுதியில் புதிதாக தெரு குழாய்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று காலை அந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தெரு குழாய்கள் திறப்பு விழா நடந்தது. திருவொற்றியூர் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.குப்பன், தெரு குழாயை திறந்து வைத்தார்.

சாலை மறியல்

ஆனால் அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை. தங்கள் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து செல்லலாம் என ஆர்வத்துடன் குடங்களை எடுத்து வந்த பெண்கள், குழாயில் தண்ணீர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட பொதுமக்கள், காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார், குடிநீர் குழாயில் தண்ணீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story