உஷாரய்யா உஷாரு


உஷாரய்யா உஷாரு
x
தினத்தந்தி 21 July 2019 5:48 AM GMT (Updated: 21 July 2019 5:48 AM GMT)

இரண்டு வருடங்களுக்கு முன்பு மிக விமரிசையாக நடந்தது அவர்களது திருமணம். அவன் குழந்தைத்தனமான முகமும், கொஞ்சும் குரலும் கொண்டவன்.

ஆனால் அழகானவன். அவளுக்கு, அவனை ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. அவளும் அழகானவள்தான். குறிப்பிட்ட சில கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்ததால் கம்பீரமான உடல்வாகு பெற்றிருந்தாள். இரு வரும் வசதியும், செல்வாக்கும் பெற்ற குடும்பத்தினர்.

‘அவர்கள் மகிழ்ச்சியாக தாம்பத்ய வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’ என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று அந்த பெண் மீது, ‘அவள் கணவரோடு ஒத்துழைப்பதில்லை. அவளுக்கு குழந்தை ஆசை இல்லவே இல்லை. திருமணமாகி இத்தனை காலம் ஆகியும் ஒருநாள் கூட அவர்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. அதற்கு அவள்தான் காரணம்..’ என்று அவள் மீது அதிரடியாக குற்றம் சுமத்தப்பட்டது. அதோடு விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தையும், மாப்பிள்ளை வீட்டார் நாடியுள்ளனர்.

‘என் கணவர் விசித்திரமான மனநோயாளி. அவரது பிரச்சினைக்கு மனோதத்துவரீதியாக தீர்வுகண்டு, அவரை திருத்தி அவரோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அந்த நல்ல எண்ணத்தோடு என் மாமியாரிடம், அவரது மகனின் முரண்பாடான சுபாவம் பற்றி பட்டும்படாமலும் சொன்னேன். உடனே அவர்கள் தப்பிப்பதற்காக, உறவினர்களை எல்லாம் அழைத்து அவசர அவசரமாக எல்லா குற்றச்சாட்டுகளையும் என் மீது சுமத்தி, நான் பெண்ணே இல்லை என்பதுபோன்ற மாயையை உருவாக்கி, விவாகரத்துகேட்டு நீதிமன்றத்தையும் நாடிவிட்டார்கள்’ என்று அவள் கண்ணீர் விடுகிறாள்.

உண்மையில் அவளது கணவர் மீது என்ன குறை? இவர்கள் வாழ்க்கையில் என்னதான் நடந்தது?

அவள் குரல் இடற தயங்கித் தயங்கி சொல் கிறாள்:

‘என் கணவரை நான் முதல் முறையாக பார்த்த அன்றே அவரைதான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்த அளவுக்கு மென்மையானவராக தோன்றினார். திருமணம் நடந்தது. அவரது தொடுதலுக்காகவும், வருடலுக்காகவும் நான் ஏங்கிக்கொண்டிருந்த முதலிரவிலே அவருக்குள் இருந்த விசித்திர சுபாவம் வெளிப்பட்டது. மேடை ஒன்றில், கலை நிகழ்ச்சியில் என்னை பார்த்ததாகவும், அன்றே என்னை ஆடையின்றி பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும்கூறி, என்னை கட்டாயப்படுத்தினார். முழு நேரமும் விளக்கை அணைக்கக்கூடாது என்றும் நிர்பந்தித்தார்.

அன்றிலிருந்து அவரோடு இருந்த கடைசி நாள் வரை நான் படுக்கை அறையில் அப் படித்தான் இருந்தேன். எல்லா நாளும் வெளிச்சம்தான். என்னை அப்படி பார்ப்பது மட்டுமே அவர் வேலை. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. இரவு முழுக்க நான் பயத் தோடும், குற்ற உணர்வோடும் இருந்ததால் என் தூக்கம் பறிபோனது. நான் தூங்கும்போது படமெடுத்துவிடுவாரோ என்று பயந்தேன். மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. சில மாதங்கள் என் தாய் வீட்டில் போய் தங்கினேன். அப்போது என் தாயிடம்கூட உண்மையை சொல்லவில்லை.

இந்த நிலையில் கணவர் வீட்டில் நான் வசித்தபோது ஒருநாள் நடு இரவில் என் மாமனாருக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. என் மாமியார், எங்கள் படுக்கை அறையை வந்து வேகமாக தட்டினார். உடனே என் கணவர் எழுந்து கதவைத் திறந்து ஓடிச்சென்று என் மாமனாருக்கு உதவினார். அப்போது என் நிலையோ கேவலமாக இருந்தது.

கணவர் விருப்பத்திற்காக நான் கழற்றிப்போட்ட ஆடைகளை, அவர் தூங்கியதும் நான் எடுத்து மீண்டும் அணிந்துவிடக் கூடாது என்பதற்காக, நான் தூங்கியதும், என் ஆடையை அறையைவிட்டு வெளியே தூக்கிவீசியிருக்கிறார். அதனால் அன்று என்னால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. நான் ரொம்ப தாமதமாக வந்ததால் மாமியார் என்னை இரக்கமற்றவள் என்றுகூறி கடுமையாகத் திட்டினார்.

அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்போதுதான் என் மாமியாரிடம், திருமணமான நாளில் இருந்து நான் அனுபவிக்கும் கொடுமையை கூறினேன். அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்வோம் என்றேன். அப்போது அனைத்தையும் அமைதியாக கேட்டுவிட்டு என்னிடம் அனுதாபம் காட்டி, ‘சீக்கிரம் நல்லது நடக்கும். அதுவரை சில வாரங்கள் நீ உன் தாய் வீட்டில் போய் இரு. யாரிடமும் இது பற்றி எதுவும் சொல்லாதே. நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாவது அவனது சுபாவத்தை மாற்றிவிடலாம்’ என்று, என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு, அந்த பெண்மணியும் அவரது சுயரூபத்தை காட்டிவிட்டார்.

மகனை பற்றிய அசிங்கங்கள் வெளியே தெரிந்தால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று கருதி, முந்திக்கொண்டு என் மீது சேற்றை வாரி பூசிவிட்டார். பலரும் அவர் சொல்வதைத்தான் நம்புகிறார்கள்..’ என்று விசித்திர நோயாளியால் பாதிக்கப்பட்ட அந்த பெண் பரிதாபமாக சொல்கிறாள்!

மகனின் மன ஊனத்தை மறைக்க சில அம்மாக்கள் இப்படியும் ‘நாடகம்’ நடத்து கிறார்கள்!

- உஷாரு வரும். 

Next Story