அஞ்செட்டி அருகே பயங்கரம் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை உடல் தீ வைத்து எரிப்பு


அஞ்செட்டி அருகே பயங்கரம் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை உடல் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 22 July 2019 3:45 AM IST (Updated: 21 July 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த கும்பல் உடலை சாலையோர பள்ளத்தில் வீசி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து சென்றனர்.

தேன்கனிக்கோட்டை,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே ஒகேனக்கல் செல்லும் சாலையில் சீங்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் மிட்டாதாரன்கொட்டாய் என்ற இடத்தில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சாலையோரமாக இருந்த பள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது.

இதில் பாதி உடல் எரிந்த நிலையில் இருந்தது. இதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் கொலையுண்ட வாலிபரின் உடல் கிடந்த இடம் அருகில் சிறிது தூரத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது.

மர்ம கும்பல், அந்த இடத்தில் வைத்து வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்து சாலையோரமாக உள்ள பள்ளத்தில் வீசி உள்ளனர். பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி உடலை தீ வைத்து எரித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார், அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவரை கொலை செய்த நபர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story