சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்துவோம் வானதி சீனிவாசன் பேட்டி


சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்துவோம் வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 4:47 PM GMT)

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்துவோம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சேலம், 

சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் ஏரி, குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகின்றன. பெரும்பாலான அரசு அலுவலகங்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டு உள்ளன.

நீர் நிலைகளை பாதுகாக்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் கடுமையான சட்டமும் கொண்டு வர வேண்டும். காஞ்சீபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தது துரதிஷ்டவசமானது. கோவிலில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

கோவிலுக்கு வயதானவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகள் யாரும் வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிடுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதை அவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

சேலம் உருக்காலை கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையை லாபத்தில் இயங்குவதற்காக தொழில்நுட்ப வல்லுனர்கள் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அந்த அறிக்கையை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானிடம் கொடுப்போம். அதன் மூலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்தவும், லாபகரமாக இயங்க வைப்பதற்காகவும் நடவடிக்கையை மேற்கொள்வோம்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் 8 வழிச்சாலை திட்டம் முக்கியமானது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க தனிக்குழு அமைக்கப்படும்.

பின்னர் அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் தெரிவிப்போம். புதிய கல்வி கொள்கை குறித்து கருத்துகளை படித்து பார்த்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோபிநாத், கோட்ட இணை பொறுப்பாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story