சேலம் கன்னங்குறிச்சியில் வீட்டுக்குள் புகுந்து ஜோதிடரை மிரட்டி நகை பறிப்பு 4 பேர் கைது
சேலம் கன்னங்குறிச்சியில் வீட்டுக்குள் புகுந்து ஜோதிடரை மிரட்டி நகையை பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னங்குறிச்சி,
சேலம் கன்னங்குறிச்சி ஏற்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கேசவ பாண்டியன்(வயது 50), ஜோதிடர். இவருடைய வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மர்ம ஆசாமிகள் ஜோதிடம் பார்க்க வந்தனர். பின்னர் அவர்களுக்கு கேசவ பாண்டியன் ஜோதிடம் பார்த்தார்.
திடீரென மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கேசவ பாண்டியன் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர். அப்போது ஜோதிடர் வீட்டுக்குள் புகுந்தது உடையாப்பட்டியை சேர்ந்த நிர்மல்குமார்(31), பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார்(35) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்களுடன் சுதன்காசன்(35), கார்த்திக்(30) ஆகியோரும் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story