உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழகம் முதலிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழகம் முதலிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 22 July 2019 5:00 AM IST (Updated: 21 July 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

‘இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது’ என்று தாரமங்கலத்தில் நடந்த புறவழிச்சாலை திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தாரமங்கலம், 

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெரியாம்பட்டியில் இருந்து துட்டம்பட்டி வரையில் ரூ.24.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும், அவர் ரூ.5.25 கோடி மதிப்பில் கொங்கணா புரம்-வடகரை வாய்க்கால் கரிமேடு சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும், தொளசம்பட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தாரமங்கலம் பகுதியில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் இந்த பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தாரமங்கலத்தில் தற்போது புறவழிச்சாலை அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். எந்தவொரு மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதி சிறந்து விளங்குகின்றதோ அந்த மாநிலம் தொழில் வளம் நிறைந்த சிறந்த மாநிலமாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவிலேயே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சிறந்து விளங்கி வருகிறது. சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் என்று சொன்னால் அது தமிழ்நாடு என்று பெயர் சொல்கின்ற அளவிற்கு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலைப் பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கின்ற மாநிலம் தமிழ்நாடு என்பதை பெருமையோடு சொல்லி கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஓமலூரில் இருந்து மேட்டூர் வரைக்கும் உள்ள ரெயில்வே பாதையில் கேட் மூடப்படும் நேரங்களில் இருபுறங்களிலும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை குறைப்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்களும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தொளசம்பட்டியில் ரூ.18.44 கோடியில் ரெயில்வே மேம்பாலம், முத்துநாயக்கன்பட்டியில் ரூ.15.94 கோடியில் ஒரு ரெயில்வே மேம்பாலம், ஜெ.எஸ்.டபிள்யூ தனியார் தொழிற்சாலைக்கு அருகிலே ரூ.19.34 கோடியில் ஒரு உயர்மட்ட மேம்பாலம், குஞ்சாண்டியூரில் ஒரு ரெயில்வே மேம்பாலம் ஆகியவை விரைந்து கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் திருச்செங்கோடு-சங்ககிரி-கொங்கணாபுரம்-தாரமங்கலம்-ஓமலூர் வரை 4 வழிச் சாலையாக விரிவுப்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையாக உருவாக்கி தரப்படும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஓமலூர்-மேச்சேரி சாலையில் ஓமலூர் முதல் மேச்சேரி வரை 14.6 கிலோமீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டு, அந்தப் பகுதியும் வளர்ச்சியடைவதற்கு விரிவுபடுத்தப்படும்.

அதேபோல் பவானி-மேட்டூர், மேட்டூர்-தொப்பூர் பகுதிகளில் செல்கின்ற வாகனங்கள் தங்குதடையின்றி செல்வதற்கு அந்த சாலைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலை அமைக்கும்பொழுது, நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால், மனமுவந்து நிலம் கொடுத்தால் தான் இதுபோன்ற சாலைகளை அமைத்து, விபத்து மற்றும் விலைமதிக்க முடியாத உயிர்சேதம், பயண நேரம் ஆகியவற்றை குறைக்க முடியும். மேலும் எரிபொருள் மிச்சப்படும். அதாவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான் எங்களுடைய லட்சியம்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றதிலிருந்து இன்று வரை சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சாலைகளை சீரமைத்து இருக்கிறேன்.

சேலத்தில் விரைவில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது. இதற்காக சேலம் இரும்பாலையில் உள்ள ஒரு பகுதி நிலத்தை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு அந்த தொழிற்சாலை அமைந்தால் இந்த பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது ஒரு வரப்பிரசாதமான திட்டம்.

நீர்மேலாண்மை மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. விவசாயத்திற்கு தேவையான நீர், குடிப்பதற்கான பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியவை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஏரிகளை விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாய அமைப்புகளும் தங்களுடைய ஆதரவினை நல்கி இத்திட்டம் சிறப்பாக செயல்பட உதவிட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதால் அதில் இருந்து கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேட்டூர் அணையில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து கொள்ளலாம்.

ஓமலூர் பகுதி விவசாயிகள் மலர்களை அதிகளவில் பயிரிட்டு பெங்களூருவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றார்கள். அதற்குத் தகுந்த விலை கிடைப்பதில்லை. எனவே, தமிழக அரசால் சர்வதேச அளவில் மலருக்கான ஏல மையம் ஒன்று ஓசூரில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விலை கிடைக்காத காலங்களில் அங்குள்ள குளிர்பதன கிடங்குகளில் மலர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு அங்கே ஓய்வு அறைகளும் கட்டிக் கொடுக்கப்படும். சர்வதேச அளவில் வருகைபுரியும் வியாபாரிகளுக்கும் தங்குவதற்கு தேவையான ஓய்வு அறைகளும் கட்டிக் கொடுக்கப்படும்.

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓமலூரிலிருந்து மேச்சேரி செல்லும் சாலையில் பிரமாண்டமான மார்க்கெட் கட்டப்படும். அதில், விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை அந்த மார்க்கெட்டில் ஆன்-லைன் மூலமாக விற்பனை செய்து கொள்ளலாம். அப்படியும் விலை கட்டுப்படியாகாத காலங்களில் அங்குள்ள குளிர்பதன கிடங்கில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு வாடகை ஏதுமில்லை. இங்கு ஏ.டி.எம். வசதியும் செய்து கொடுக்கப்படும்.

சென்னைக்கு அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவுப் பூங்கா அமைக்க இருக்கின்றோம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை உணவுப் பூங்காவில் விற்பனை செய்கின்ற பொழுது உரிய விலை கிடைக்கும். வறட்சியால் பாதிக்கப்படுகின்ற விவசாய நிலங்களுக்கு சொட்டு நீர்ப்பாசன கருவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்க வேண்டுமென்று பிரதமர் சொல்லியிருக்கின்றார். எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் காக்கின்ற அரசாக இருக்கின்றது.

தொழில் வளம் பெருக, விவசாயம், ஜவுளித் தொழில் இரண்டும் சிறக்க, கைத்தறி நெசவாளர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்திருக்கின்றோம். பொங்கல் திருநாளன்று அணிவதற்கு பொதுமக்கள் கைத்தறி வேட்டி, சேலைகள் நெய்வதற்கான கூலியை உயர்த்திக் கொடுத்திருக்கின்றோம். புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதன் மூலமாக அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இது மக்களின் அரசு. விவசாயிகளின் அரசு. ஜெயலலிதாவினுடைய அரசு. விவசாயிகளின் நலனை தலையாய கடமையாகக் கொண்டிருக்கின்றது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசாக செயல்பட்டு வருகிறது. எனவே, அனைவரும் இந்த அரசுக்கு துணை நின்று அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய உதவிட வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story