கர்நாடக அணைகளில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணையை இன்று காவிரி நீர் வந்தடையும்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக இன்று மேட்டூர் அணையை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கேரள மாநிலம் வயநாட்டையொட்டி அமைந்துள்ளது. இதனால் கேரளாவில் பெய்துவரும் மழையின் காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இதேபோன்று மண்டியா மாவட்டத்தில் மழை அதிகரித்துள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை தொடர்ந்து கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடையும்.
நேற்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.28 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 233 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை வரை மேட்டூர் அணையை வந்தடையவில்லை. இந்த தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனெனில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு நேற்று காலை முதல் வினாடிக்கு 1,000 கனஅடியாக திடீரென குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீர்மட்டம் 39.28 அடியே உள்ளதால் மேட்டூர் அணை குட்டை போல காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதம் 100 அடியை தாண்டி கடல் போல் அணை காட்சி அளித்தது. எனவே அணை கடந்த ஆண்டை போல 100 அடியை தாண்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story