ஓசூர் அருகே டிரைவருக்கு சூடு வைத்து கொல்ல முயற்சி மனைவி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
ஓசூர் அருகே டிரைவருக்கு “வாட்டர்ஹீட்டரால்” சூடு வைத்து கொல்ல முயன்ற மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மத்திகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையம் பஞ்சல்துறை கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 37). இவர் ஓசூர் அருகே பெத்த பேளக்கொண்டப்பள்ளியில் கடந்த 2 மாதங்களாக மனைவி ஜோதியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சின்னராஜ் கல்குவாரியில் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சின்னராஜ் வீடு திரும்பினார். அப்போது ஜோதி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் சின்னராஜ் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரது மனைவி ஜோதி உள்பட 4 பேர் சேர்ந்து சின்னராஜ் மீது அமர்ந்து அவரது கை, கால்களை பிடித்து கொண்டு “வாட்டர்ஹீட்டர்” மூலம் சூடு வைத்து கொலை செய்ய முயன்றனர். சின்னராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவரது மனைவி ஜோதி உள்பட 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.படுகாயம் அடைந்த சின்னராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மனைவி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story