குறுவை அறுவடை பணி தீவிரம்: மேலும் 8 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம்


குறுவை அறுவடை பணி தீவிரம்: மேலும் 8 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம்
x
தினத்தந்தி 21 July 2019 10:30 PM GMT (Updated: 21 July 2019 6:21 PM GMT)

மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி செ ய்த நெற்பயிர்கள் அறுவடைசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே மேலும் 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை(செவ்வாய்க் கிழமை) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் தற்போது 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவைசாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீமு‌‌ஷ்ணம், கம்மாபுரம் வட்டாரத்தில் மட்டும் 6,400 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை நடைபெற்று வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கடந்த 19-ந் தேதி கடலூரில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் அன்புசெல்வன், ஸ்ரீமு‌‌ஷ்ணம் தாலுகாவில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாகவும், மேலும் 8 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்படி ஸ்ரீமு‌‌ஷ்ணம் தாலுகாவில் கே.தொழூர், எம்.பி.அகரம், சி.கீரனூர், நாச்சியார் பேட்டை ஆகிய 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 19-ந் தேதி திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் மேலும் 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அவை செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஸ்ரீமு‌‌ஷ்ணம் தாலுகாவில் தேத்தாம்பட்டு, ஸ்ரீநெடுஞ்சேரி, அம்புஜவல்லிப்பேட்டை, ஸ்ரீமு‌‌ஷ்ணம், ஆனந்தகுடி, விருத்தாசலம் தாலுகாவில் ராஜேந்திரப்பட்டினம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வெட்சியூர், புவனகிரி தாலுகாவில் மருதூர் என மேலும் 8 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவை நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் செயல்படும் என தெரிவித்தார்.

Next Story