கடலூர், விருத்தாசலத்தில் மணல் கடத்தல் 4 பேர் கைது


கடலூர், விருத்தாசலத்தில் மணல் கடத்தல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2019 3:30 AM IST (Updated: 21 July 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

கடலூர், விருத்தாசலத்தில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று சாவடி வை‌‌ஷ்ணவி கார்டன் அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக உண்ணாமலை செட்டிச்சாவடி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் செந்தில்குமார் (வயது 35),முருகவேல் மகன் மணிபாலன் (27), அய்யனார்கோவில் தெரு கோதண்டன் மகன் திருமுருகன் (30) ஆகிய 3 பேரும் தென்பெண்ணையாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் எடச்சித்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டியில் மணல் அள்ளி வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அங்குள்ள மணிமுக்தாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த காத்தவராயனை (32) கைது செய்து, அவரிடம் இருந்த மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சுகுணா தலைமையிலான குழுவினர் விருத்தா சலம் பெரிய கண்டியாங் குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு லாரியை மறித்தனர். அதற்குள் அதன் டிரைவர் சற்று தொலைவில் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்த போது, அதில் நடியப்பட்டு பகுதியில் இருந்து கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்து இதுகுறித்த புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story