திருக்கோவிலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து நகை-செல்போன் பறிப்பு 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போனை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள கனகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் மகள் சத்யா(வயது 24). இவர் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் கேன்கள் மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனியார் குடிநீர் கேன்கள் விற்பனை நிறுவனத்தில் பணியில் இருந்த சத்யா வேலை முடிந்ததும் இரவு தனது மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். கனகநந்தல் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென மொபட்டை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி சத்யா அணிந்திருந்த நகை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதேபோல் சம்பவத்தன்று இரவு திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(26) என்பவர் காவேரி சந்து வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென மணிகண்டனை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.150-ஐ பறித்துச் சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்த தனித்தனி புகார்களின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் திரும்பிச்செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்து உஷாரான போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தங்கவேல்(32), திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூரை சேர்ந்த மாயவன் மகன் அண்ணாமலை(27) ஆகியோர் என்பதும், சத்யா, மணிகண்டன் ஆகியோரிடம் நகை, செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story