பால் குளிரூட்டும் நிலையத்தில் புகுந்து தொழிலாளி உள்பட 3 பேரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு 2 பேர் கைது


பால் குளிரூட்டும் நிலையத்தில் புகுந்து தொழிலாளி உள்பட 3 பேரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2019 3:45 AM IST (Updated: 22 July 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிபேட்டை அருகே பால் குளிரூட்டும் நிலையத்தில் புகுந்து தொழிலாளி உள்பட 3 பேரை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகே கும்பக்கொட்டாய் பகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. மெட்டாலா, கப்பலூத்து, உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, கோரையாறு உள்ளிட்ட கூட்டுறவு சங்கத்தில் இருந்து பால் சேகரிக்கப்பட்டு இங்கு குளிரூட்டப்படுகிறது. இந்த நிலையத்தில் செயலாளராக தங்கதுரை என்பவரும், பரிசோதகராக பெரியசாமியும் உள்ளனர். மேலும் பால் அளக்கும் தொழிலாளியாக சக்கரவர்த்தி (வயது 28) என்பவரும் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சக்கரவர்த்தி, அவரது நண்பர்களான கும்பக்கொட்டயை சேர்ந்த கணேசன் (39), மணிகண்டன் (27) ஆகியோர் பால் குளிரூட்டும் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மோட்டார்சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் வெளியே நின்று கொண்டார். மற்ற 3 பேரும் கையில் கத்தியுடன் திடீரென்று பால் குளிரூட்டும் நிலையத்திற்குள் புகுந்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரிடமும் கத்தியை காட்டி பணத்தை எடுத்துக்கொடுங்கள் என்று மிரட்டினர். மேலும், அந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் சக்கரவர்த்தி, மணிகண்டன் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கணேசனை மர்ம நபர் ஒருவன் கத்தியின் முனையால் தாக்கி உள்ளான்.

இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் சக்கரவர்த்தியிடமிருந்து ரூ.300-யும், மணிகண்டனிடமிருந்து ரூ. 3 ஆயிரத்தையும், ஒரு செல்போனையும் பறித்து விட்டு தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரி மூலக்கடை பகுதியை சேர்ந்த தீபக் (21), பட்டணம் முனியப்பம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த குமரேசன் (24) உள்ளிட்ட 4 பேர் என தெரியவந்தது. இதில், தீபக் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பட்டணம் முனியப்பம்பாளையத்தில் உள்ள அவரது தங்கை வீட்டுக்கு வந்திருந்தார். சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் தற்காப்புக்காக தடுத்ததில் தீபக் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக், குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story