மோகனூரில் 3 ஆயிரம் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த மணல் பறிமுதல்
மோகனூரில் 3 ஆயிரம் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மோகனூர்,
மோகனூர் சுற்று வட்டார பகுதிகளில் சிலர் காவிரி ஆற்றில் அனுமதியின்றி அள்ளிய மணலை சாக்கு மூட்டைகளில் கட்டி பதுக்கி வைத்திருப்பதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று ஒருவந்தூர், மணப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் ரோந்து சென்றனர்.
அப்போது, அந்த பகுதிகளில் ஏராளமான மணல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மர்ம நபர்கள் ஆற்றில் மணலை அள்ளி அவற்றை மூட்டைகளில் கட்டி வைத்து வாகனங்களில் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 3 ஆயிரம் மூட்டைகளில் இருந்த 40 யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்து 12 லாரிகளில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆற்றில் மணல் அள்ளி கடத்தும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story