கொலபாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ; ஒருவர் பலி 14 பேர் மீட்பு


கொலபாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ; ஒருவர் பலி 14 பேர் மீட்பு
x
தினத்தந்தி 22 July 2019 5:00 AM IST (Updated: 22 July 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

கொலபாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார். 14 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

மும்பை,

மும்பை கொலபாவில் உள்ள தாஜ் ஓட்டல் அருகே ‘சர்ச்சில் சேம்பர்' என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது. நேற்று மதியம் 12.20 மணி அளவில் இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் மாடியில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.

இந்த தீ விபத்தில் 3-வது மாடியில் இருந்தவர்கள் பலர் வீடுகளில் சிக்கி கொண்டனர். புகையில் சிக்கி மூச்சுத்திணறலால் தவித்த அவர் கள் உதவி கேட்டு அலறினார்கள்.

புகையை பார்த்து கட்டிடத்தின் மற்ற மாடிகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். அவர்கள் இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் 4 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் 3-வது மாடியில் சிக்கி தவித்த 14 பேரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதில் காயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட மாடியில் சென்று பார்த்தபோது, தீக்காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடந்தார்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவரது பெயர் ஷியாம் ஐயர் (வயது54) என்பது தெரியவந்தது.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story