தஞ்சை, குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் குளங்களை தூர்வாரும் பணி


தஞ்சை, குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் குளங்களை தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 7:15 PM GMT)

தஞ்சை, குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் குளங்களை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சையை ஆண்ட மன்னர்களில் ராஜராஜசோழன் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து நகரின் நீர் தேவைக்காக 50-க்கும் மேற்பட்ட குளங்களை வெட்டினார். இதில் அழகிகுளம் என்பது தனி சிறப்பு பெற்றது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். அவரது சிவத்தொண்டை பார்த்து மாமன்னன் ராஜராஜசோழன் அந்த மூதாட்டிக்கு தீர்வையின்றி அழகி குளத்தை பதிவு செய்து கொடுத்தான் என்ற வரலாறு கூறுகிறது.

தூர்வாருதல்

இந்த குளம் கருவேலமரங்கள் வளர்ந்தும், புதர் மண்டியும், குப்பை மேடாக காட்சி அளித்தது. இந்த குளத்தை பாம்பாட்டித்தெரு, கவாஸ்காரத்தெரு மக்கள் இணைந்து சுத்தம் செய்தனர். இதையடுத்து பொக்லின் எந்திரங்கள் மூலம் குளத்தை தூர்வாரும் பணியில் பொதுமக்கள் நேற்று ஈடுபட்டனர். 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த களத்திற்கு கல்லணைக்கால்வாயில் இருந்தும், ராணி வாய்க்கால் மூலமும் தண்ணீர் வரத்து இருந்துள்ளது. ஆனால் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த வரத்து கால்வாயையும் தூர்வார வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

சடையன் குளம்

நீர்நிலைகளை பாதுகாத்தல், கிராமம் முழுவதும் தூய்மையை கடைபிடித்தல், அனைவரது சுகாதாரத்தையும் பேணி காத்தல் ஆகியவற்றுக்காக தஞ்சையை அடுத்த குருங்குளம் கிழக்கு ஊராட்சியை தன்னார்வ அமைப்புகள் பூர்ணசக்தி என்ற திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு தத்தெடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஊராட்சியில் நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக சடையன் குளம் தூர்வாரும் பணியை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.ஆர். மருத்துவமனை டாக்டர்கள் மைக்கேல், ராதிகா மைக்கேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் சுதாமணி, ராஜாமுகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கைலாபுரி ஏரி

தஞ்சை அருகே வாளமர்கோட்டையில் கைலாபுரி ஏரி உள்ளது. வாளமர்கோட்டை, குளிச்சப்பட்டு, திருநாயிருப்பு, செண்பகபுரம், கத்தரிநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் இந்த ஏரி மூலமாக பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியை குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சம் செலவில் தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி ஏரியை துர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் ஏரியின் கரையை பலப்படுத்தும் பணி, படித்துறைகனை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாசனத்துக்கு உதவும் ஏரியை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெறுவதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story