வெளிநாட்டு பணம் தருவதாக நூதன மோசடி 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது


வெளிநாட்டு பணம் தருவதாக நூதன மோசடி 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2019 5:00 AM IST (Updated: 22 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில், வெளிநாட்டு பணம் தருவதாக கூறி நூதன முறையில் பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் பர்வேஷ் அலாம் (வயது 37). இவர், சென்னை சவுகார்பேட்டையில் சாலையோரம் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.

இவர், திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த 17-ந் தேதி என்னை சந்தித்த வடமாநிலத்தை சேர்ந்த சிலர், தங்களிடம் சவுதி ரியால் உள்ளது. அதனை இந்தியாவில் மாற்றினால் சுமார் ரூ.27 லட்சம் இந்திய பணம் கிடைக்கும். ஆனால் இந்திய பணம் ரூ.3 லட்சம் கொடுத்தால் உங்களுக்கு சவுதி ரியால் தருகிறோம் என்று கூறி பையில் வைத்து இருந்த ரியாலை காண்பித்தனர்.

இதனை நம்பிய நான், ரூ.3 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன். என்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு துணிப்பையில் சுற்றிய பண்டல் ஒன்றை கொடுத்து, அதை வீட்டில் சென்று பிரித்து பார்க்கும்படி கூறி சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த நான், பண்டலை பிரித்து பார்த்த போது உள்ளே வெறும் காகிதங்களை வைத்து என்னை ஏமாற்றியது தெரிந்தது. என்னிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர்களை பிடித்து, பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதையடுத்து இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், அடையாறு துணை கமிஷனர் பகலவன், திருவான்மியூர் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான 4 பேரின் அடையாளங்களை வைத்து கேளம்பாக்கம், கே.எஸ்.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த மோகித் ஜாபர் (31), சுமன் (29), முகமது அனிக்ஷேக் (30), ரபி (21), சோஹைதுல் ரியாஸ் (25), பாத்திமா பேகம் (30), பக்கிபேகம் (30) மற்றும் 18 வயது சிறுவன் என 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இவர்கள், ஒரே குடும்பம் எனக்கூறி சென்னை புறநகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி, குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து அவர்களிடம், தாங்கள் வெளிமாநிலத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு வந்ததாகவும், அவசர பணத்தேவை இருப்பதால் தங்களிடம் உள்ள வெளிநாட்டு பணத்தை குறைந்த விலைக்கு தருவதாக கூறி தங்களிடம் உள்ள சில அசல் வெளிநாட்டு பணத்தை காட்டி ஆசை காட்டுவார்கள்.

அதை நம்பி பணம் கொடுப்பவர்களிடம், வெற்று காகிதங்களை கொடுத்து மோசடி செய்தது தெரிந்தது. இவ்வாறு இவர்கள், ராயப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரபிக் உசைன் என்பவரிடம் ரூ.2.68 லட்சம், பனையூரை சேர்ந்த உஸ்மான் கனி என்பவரிடம் ரூ.2 லட்சம் என பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது.

Next Story