பொள்ளாச்சி அருகே ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி வாலிபர் சாவு


பொள்ளாச்சி அருகே ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 22 July 2019 3:45 AM IST (Updated: 22 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பொள்ளாச்சி,

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் ஆனந்த் (வயது 22). பி.காம். பட்டதாரியான இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆனந்த் தனது நண்பர்கள் சிலருடன் ஆழியாறுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் இயற்கை காட்சிகளை சுற்றிபார்த்துவிட்டு ஆழியாறு தடுப்பணையில் குளிக்க தொடங்கினர்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ஆனந்த், தனது நண்பர்கள் கண் முன்பே தண்ணீரில் மூழ்கினார். இதனைக்கண்ட அவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தண்ணீரில் மூழ்கிய ஆனந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ஆனந்த் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ஆழியாறு தடுப்பணையில் குளிக்க கூடாது என்றும், ஆபத்தான பகுதி என்றும் அந்த பகுதியில் போலீசார், வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் வாலிபர்கள் எச்சரிக்கை மீறி ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே தடுப்பணை பகுதியில் உயிரிழப்புகளை தடுக்க போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story