எருமாடு-வடுவஞ்சால் இடையே ரூ.4 கோடியில் சாலை சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி


எருமாடு-வடுவஞ்சால் இடையே ரூ.4 கோடியில் சாலை சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 July 2019 9:45 PM GMT (Updated: 21 July 2019 8:54 PM GMT)

எருமாடு-வடுவஞ்சால் இடையே ரூ.4 கோடியில் சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே நேதாஜி நகர், பனஞ்சிறா, கோட்டூர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். எருமாட்டில் இருந்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வடுவஞ்சால் பகுதிக்கு கோட்டூர் வழியாக சாலை செல்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சாலையில் ஆய்வு நடத்தினர்.

இதைத்தொடர்ந்து பிரதம மந்திரி கிராம ஜதக்யோஜனா திட்டம் மூலம் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 2¾ கிலோ மீட்டர் தூரம் சாலையை சீரமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையை அகலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இந்த பணியை கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தனன், பொறியாளர் மணிகண்டன், பணி மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் பார்வையிட்டனர்.

சாலை சீரமைக்கப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story