தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை இந்து முன்னணி மாநில செயலாளர் பேட்டி


தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை இந்து முன்னணி மாநில செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 22 July 2019 3:00 AM IST (Updated: 22 July 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட உள்ளது என்று இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் ஊட்டியில் பேட்டி அளித்தார்.

ஊட்டி,

இந்து முன்னணியின் நீலகிரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தேவாங்கர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோவை கோட்ட செயலாளர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில செயலாளர் கிஷோர் குமார் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா தெய்வீக தமிழை பாதுகாப்போம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 1,008 விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை செய்யப்படும். விசர்ஜன விழா 3 முதல் 7 நாட்கள் வரை நடக்க உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், எருமாடு ஆகிய 6 இடங்களில் விசர்ஜன ஊர்வலம் நடைபெறும். விநாயகர் சிலைகளை பிரதி‌‌ஷ்டை செய்யும் இடங்களில் பந்தல் அமைத்து, இலவசமாக மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இந்த உற்சவத்திற்கு வயதானவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்று காஞ்சீபுரம் கலெக்டர் தெரிவித்து உள்ளது கண்டனத்துக்கு உரியது. இறைவனை தரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அத்திவரதரை பக்தர்கள் தடை இல்லாமல் தரிசிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துகொடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தியதில், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டது தெரியவந்தது. அவர்களை தமிழகத்தில் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பல ஆண்டுகளாக திட்டமிட்டு தமிழகத்தை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றப்பட்டு உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறை விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. கோவில்களில் தேவாரம், திருவாசகத்தை பாட வேண்டும். நாத்திகவாதிகள் தமிழகத்தை சீரழித்து கொண்டு உள்ளனர். கோவில்களை அரசு ஏற்று இந்து அறநிலையத்துறை கோவிலாக மாற்றுகிறது.

கோவில்களின் சொத்துகளுக்கு குத்தகை, கட்டிடங்களுக்கு வாடகை, அபிஷேக கட்டணம், அர்ச்சனை கட்டணம், பூஜை செய்ய கட்டணம், முடி எடுக்க கட்டணம் போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கோவில்கள் சரியாக பராமரிக்கப்படுவது இல்லை. கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தமிழக அரசாங்கம் உதவி செய்வது இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். எனவே அரசு அதிகாரிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள கோவில் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story