தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் 5 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
தூத்துக்குடியில் நடந்த டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் குட்டி என்ற நரசிம்மன் (வயது 39). இவர் தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 18-ந் தேதி டாஸ்மாக் பாரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது, அங்கு மது குடிக்க வந்த தூத்துக்குடி வடக்கு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சகிலன்(22), சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டைட்டஸ்(22), தாளமுத்துநகர் தந்தைபெரியார் நகரை சேர்ந்த மதன்குமார்(22), டிரைவரான பிரமுத்துவிளையை சேர்ந்த ஆனந்த்(29), மைக்கேல் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 19-ந் தேதி இரவு நரசிம்மன், செல்வநாயகபுரத்தில் தான் தங்கி உள்ள அறையின் முன்பு நின்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த 5 பேரும், அவரை குத்திக் கொலை செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சகிலன், டைட்டஸ், மதன்குமார், ஆனந்த், மைக்கேல் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதில், கடந்த 18-ந் தேதி நாங்கள் மது குடிக்க சென்றோம். அப்போது, எங்களுக்கும், நரசிம்மனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது நரசிம்மன் எங்களை தாக்கினார். ஆனாலும் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். மறுநாள் கூடுதலாக மதுபாட்டில் வாங்குவதற்காக இரவில் நாங்கள் அங்கு சென்ற போது, மீண்டும் நரசிம்மனுடன் பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் நரசிம்மனை குத்திக்கொலை செய்தோம் என்று தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story