மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை அவசர கதியில் திருத்துவதை கைவிட வேண்டும் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் வலியுறுத்தல்
மத்திய அரசு அவசர கதியில் தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும் என்று நெல்லையில் நேற்று தொடங்கிய சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை,
தமிழ்நாடு அரசுபோக்குவரத்து ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு) 14-வது மாநில மாநாடு நேற்று நெல்லையில் தொடங்கியது. இதையொட்டி காலையில் ரெட்டியார்பட்டி ரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து ஜோதி புறப்பட்டது. இந்த ஜோதி பயணம் குலவணிகர்புரம் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் முடிவடைந்தது. அங்கு மாநில குழு தியாகராஜன், சம்மேளன துணைத்தலைவர்கள் காளியப்பன், பிச்சை ஆகியோர் ஜோதியை பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரசல், மாநாட்டு அரங்கில் வரலாற்று கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து துணைத்தலைவர் சந்திரன் கொடியேற்றினார். மாநாட்டுக்கு சம்மேளன தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். துணை பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தீர்மானம் வாசித்தார். பொதுச் செயலாளர்கள் திவாகரன், ஆறுமுகநயினார் ஆகியோர் பேசினர். பொருளாளர் தயானந்தம் வரவு-செலவு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து குழு விவாதம் நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மத்திய பாரதீய ஜனதா அரசு தொழிலாளர் சட்டங்களை அவசர கதியில் திருத்துவதை உடனடியாக கைவிட வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் ‘ரிசர்வ்’ என்ற பெயரில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கண்டக்டர்களுக்கு தரமான டிக்கெட் வழங்கும் கருவி மற்றும் காகித சுற்று வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான பணப்பலன்களை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை தமிழக அரசு பட்ஜெட்டில் ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். பொது போக்குவரத்தை தனியாரிடம் கொடுக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாடு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.
Related Tags :
Next Story