தாராபுரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்: அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் பலி


தாராபுரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்: அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 8:55 PM GMT)

தாராபுரத்தில் 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தாமோதரன் (வயது 34). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து, வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் கொண்டரசம்பாளையம் அருகே உள்ள ஜீவா காலனி பகுதியில், குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை தாமோதரன் மோட்டார்சைக்கிளில் தனது சொந்த ஊரான ஆச்சியூருக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்த அவரது நண்பரான ஆச்சியூரைச் சேர்ந்த விவசாயி மணிமுருகேசன் என்பவருடன், மோட்டார்சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டு வந்தார்.

அப்போது மடத்துக்குளம் தாலுகா, கணியூர் மதி நகரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகனான அழகிரிசாமி (45) மற்றொரு மோட்டார்சைக்கிளில் தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர் திருப்பூரில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வந்தார்.

எதிரெதிரே 2 மோட்டார்சைக்கிள்களும் வேகமாக வந்து கொண்டிருந்த நிலையில், தாராபுரம்– உடுமலை ரோட்டில் கொண்டரசம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் அருகே, திடீரென எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 மோட்டார்சைக்கிள்களில் சென்ற தாமோதரன், மணிமுருகேசன், அழகிரிசாமி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் தாமோதரனும், அழகிரிசாமியும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிமுருகேசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story