நாங்குநேரி ஒன்றியத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் திட்டப்பணிகள் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்


நாங்குநேரி ஒன்றியத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் திட்டப்பணிகள் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 July 2019 10:00 PM GMT (Updated: 21 July 2019 8:55 PM GMT)

நாங்குநேரி ஒன்றியத்தில் ரூ.2½ கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை, அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

இட்டமொழி,

நாங்குநேரி ஒன்றியத்தில் தாய் திட்டத்தின் கீழ் அம்மா பூங்கா, தார்சாலை அமைத்தல், சிமெண்டு தளக்கல் அமைக்கும் பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழா பணிகள் ரூ.2½ கோடி மதிப்பில், நாங்குநேரி மற்றும் சங்கனாங்குளம் ஊர்களில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குனர் பழனி வரவேற்றார்.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு ரூ.2½ கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். சங்கனாங்குளத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்காவை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அங்கு நடந்த விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது:-

நாங்குநேரி ஒன்றியத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் 103 திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்கவும், எந்த குறையும் வராதவாறு பார்த்துக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளேன். அம்மா பூங்கா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாகும். கிராமங்கள் தோறும் அம்மா பூங்கா அமைத்து அதில் உடற்பயிற்சி கூடமும் செயல்படுகிறது. கிராமத்து மக்கள் உடல்நலனை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் செல்போனில் செலவிடும் நேரத்தை குறைத்து வெளியே வந்து, உடற்பயிற்சி செய்து விளையாட்டு துறையில் ஜொலிக்க வேண்டும். இதனை பயன்படுத்தி நோயற்ற வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-

நாங்குநேரி ஒன்றியத்தில் அம்மா பூங்கா திறக்கப்பட்டு அதில் உடற்பயிற்சி கூடமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களை பொதுமக்களாகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். அதில் போஸ்டர்களை ஒட்டக்கூடாது. உங்கள் வீட்டை அழகாக வைப்பது போல வைத்திருக்க வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் உடற்பயிற்சி செய்து உடல்நலத்தை பேண வேண்டும்.

நாங்குநேரி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான வேலைகள் இன்னும் 2 வாரங்களில் நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் 185 குளங்கள் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது. இதில் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் ரூ.2 கோடி மதிப்பில் குடிமராமத்து பணி நடைபெற உள்ளது. இதனை எந்த காண்டிராக்டரும் செய்ய போவதில்லை. விவசாயிகள் தான் இந்த குடிமராமத்து பணிகளை செய்ய உள்ளனர். இதனால் முறைகேடுகள் எதுவும் நடைபெறாது. நீங்கள் எந்த பிரச்சினை என்றாலும் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்து தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 3 பேருக்கு உதவி தொகை வழங்கினார்.

விழாவில் இணைச் செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன், கூட்டுறவு தலைவர் வடிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story