அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் - ராமேசுவரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்


அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் - ராமேசுவரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 22 July 2019 4:30 AM IST (Updated: 22 July 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 1 கோடி மரக்கன்று நடும் திட்டத்தை ராமேசுவரத்தில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது.

கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அங்கு வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள் அடங்கிய பல புகைப்படங்களும், ஓவியங்களும், அவரது பல கண்டுபிடிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

மணி மண்டபத்தை காண இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டில் மட்டும் கலாமின் மணி மண்டபத்தை 1 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

வருகிற 27-ந்தேதி அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மணிகண்டன், கலெக்டர் வீரராகவராவ் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும், விஞ்ஞானிகளும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதுபோல் கலாமின் குடும்பத்தினர் வருகிற 26-ந்தேதி அன்று மாலை அல்லது 27-ந்தேதி காலை 8 மணிக்கு கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் தலைமையில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதுபற்றி கலாமின் பேரனும் கலாம் பவுண்டேஷன் நிர்வாக பொறுப்பாளருமான ஷேக் சலீம் கூறியதாவது:-

அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் வருகிற 27-ந்தேதி கலாம் மணிமண்டபம் அருகில் உள்ள கட்டிடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள உள்ளார்.

நிகழ்ச்சியில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதுபோல் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி என பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மத்திய அரசு அறிவித்தபடி அப்துல் கலாம் மணிமண்டபம் அருகிலேயே அறிவியல் அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நினைவு தினத்தையொட்டி கலாமின் நினைவிடம் மற்றும் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியை அழகு படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story