தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது
தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியதை சுற்றுலா பயணிகள் நீண்ட தூரம் நடந்து சென்று வேடிக்கை பார்த்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி. இங்கு எப்போதும் கடல் கொந்தளிப்பாக காணப்படும். இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடலானது பல அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. கரையிலிருந்து நீண்ட தூரம் வரையிலும் தண்ணீர் வற்றிய நிலையில் கடல் அலைகள் வேகம் இல்லாமல் அமைதியாக இருந்தது.
ஏராளமான சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் என அனைவரும் கடலுக்குள் நீண்ட தூரம் வரை நடந்து சென்று வற்றி காணப்பட்ட கடலை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்ததுடன் அங்கு நின்று செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் மாலை 3 மணிக்கு பின்னர் அரிச்சல்முனை கடல் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதுபற்றி தனுஷ்கோடியை சேர்ந்த முனியசாமி என்ற மீனவர் கூறியதாவது:–
ஆண்டுதோறும் இந்த சீசனில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதோடு கடல் கொந்தளிப்பாகவே இருக்கும். ஆனால் நேற்று காலை முதலே அரிச்சல்முனை பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு கடல் நீரானது நீண்டதூரம் வரையிலும் வற்றிய நிலையில் காணப்பட்டது. இதுவரை இதுபோன்று நீண்ட தூரம் வரையிலும் கடல்நீர் வற்றிய நிகழ்வு நடந்தது கிடையாது. பொதுவாகவே இந்த ஆண்டு மாறுபட்டு வீசும் காற்றின் வேகத்தால் மீன் பிடி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.