தாறுமாறாக ஓடிய கார் மோதல்; சிறுமியுடன் தந்தை படுகாயம் பேரூராட்சி ஊழியர் மீது வழக்கு


தாறுமாறாக ஓடிய கார் மோதல்; சிறுமியுடன் தந்தை படுகாயம் பேரூராட்சி ஊழியர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 July 2019 3:45 AM IST (Updated: 22 July 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் சிறுமியுடன் தந்தை படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய பேரூராட்சி ஊழியர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ததேயுஷிபு (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் மகள் ஷைலாவுடன் (5) மோட்டார் சைக்கிளில் நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நித்திரவிளை சந்திப்பு அருகே சென்றடைந்த போது, அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் ஒன்று ததேயுஷிபு மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ததேயுஷிபு, சிறுமி ஷைலா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வழக்கு

இதற்கிடையே தாறுமாறாக ஓடிய காரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாகனங்களில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அதில் வந்த நபரை பிடித்து நித்திரவிளை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காஞ்சாம்புரம் தெருவுமுக்கு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (44) என்பதும், ஏழுதேசம் பேரூராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் சுரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story