பெண் குழந்தைகளை கண்டுபிடித்து கருவில் அழிக்க உதவும் டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்


பெண் குழந்தைகளை கண்டுபிடித்து கருவில் அழிக்க உதவும் டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
x
தினத்தந்தி 22 July 2019 4:15 AM IST (Updated: 22 July 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளை கருவில் கண்டுபிடித்து அழிக்க உதவும் டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் கூறினார்.

மலைக்கோட்டை,

மாதவிடாய் சுகாதார மேலாண்மை கூட்டமைப்பு, இந்திரா காந்தி கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் சுகாதாரம் மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வித்யா லட்சுமி வரவேற்று பேசினார். ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பெண்கள் அரசு சாரா நிறுவனம் மற்றும் சுகாதார மேலாண்மை கூட்டமைப்பு ஆலோசனை குழு உறுப்பினர் கண்ணகி சந்திரசேகரன், டாக்டர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் திருச்சி மாவட்ட முன்னாள் கலெக்டரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

மாதவிடாய் தொடர்பாக மக்களிடம் தற்போது நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது. பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் சேர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தால் தான் மக்களிடம் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பெண் குழந்தைகள் பிறப்பு தற்போது மிகவும் குறைந்துள்ளது. இதற்காக நாம் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் தான் என்ற நிலைமை வந்துவிட்டது.

இந்த நிலைமை மாறி ஆண்களுக்கு சமமாக பெண்களும் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு டாக்டர்களும் ஒரு காரணம். ஏன் என்றால் கருவிலேயே பெண் குழந்தை என்று பார்த்து கருவை அழித்துவிட ஒரு சில டாக்டர்கள் உதவியாக இருக்கிறார்கள். இவர்களை கண்டுபிடித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணுக்கு பெண் சமம். பெண்கள் முன்னேற்றத்திற்கு சமுதாயம் ஒத்துழைக்க வேண்டும். குடும்பத்தில் மகள்களை விட, மகன்களை தான் பெற்றோர்கள் அதிகமாக கவனிக்கிறார்கள். ஆனால் பெண் குழந்தைகள் தான் இந்த சமுதாயத்தின் சொத்து, கண்கள் என்று பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு தற்போது அதிகமாக ரத்தசோகை இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்த குறைபாடுகளை நீக்க ஹீமோகுளோபின் அதிகரிக்க பெண்கள் சத்தான உணவு வகைகளையும், சிறுதானிய உணவு வகைகளையும் அதிகமாக சாப்பிட வேண்டும். சுத்தம் சுகாதாரத்தை பெண்கள் தங்களுடைய வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story