மானாமதுரை போலீஸ் நிலையத்தில் வாகனங்கள் ஆக்கிரமித்த இடத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் போலீசார்


மானாமதுரை போலீஸ் நிலையத்தில் வாகனங்கள் ஆக்கிரமித்த இடத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் போலீசார்
x
தினத்தந்தி 21 July 2019 10:30 PM GMT (Updated: 21 July 2019 9:22 PM GMT)

வாகனங்கள் ஆக்கிர மித்து இருந்த இடத்தில் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டு போலீசார் வளர்த்து வருகின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் கடந்த 1949-ல் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. கடந்த 1988-ம் ஆண்டு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மானாமதுரை காவல்நிலைய எல்லைக்குள் 46 பெரிய கிராமங்களும், 36 சிறிய கிராமங்களும் உள்ளன. 80 போலீசார் இங்கு பணிபுரிகின்றனர். தினசரி காவல் நிலையத்தில் சொத்து தகராறு, இடப்பிரச்சினை, அடிதடி, மோசடி, குழாயடி சண்டை என ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருக்கும்.

போலீஸ் நிலையத்துக்கு வருபவர்கள் நாள் கணக்கில் காத்து கிடக்க வேண்டி இருக்கும். யாரிடம் புகார் செய்வது, யாரிடம் பதில் பெறுவது என புகார் கொடுக்க வருபவர்கள் குழம்பி போவார் கள். போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் விபத்தில் சிக்கிய வாகனங்கள், சோதனையில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், மோசடி வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு தேங்கி கிடந்தன. இந்த நிலையை மாற்ற வேண்டும் பணிபுரியும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கருதிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் மற்றும் போலீசார் மாற்றங்களை செய்துள்ளனர். போலீஸ் வளாகத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் அமர இருக்கை, வாகன நிறுத்துமிடம், போன்ற இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர்.

தற்போது இன்ஸ்பெக்டர் கதிர்வேல் பணிமாறுதல் காரணமாக வேறு பகுதிக்கு சென்றாலும் அந்த பணிகளை மற்ற போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். புகார் தர வருபவர்கள் யாரிடம் புகார் தர வேண்டும் என ஆலோசனை வழங்க வரவேற்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வழிகாட்டுதல்படி புகார்தாரர் குழப்பமின்றி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் தரலாம். கொடுக்கப்பட்ட புகார் குறித்த நிலவரத்தையும் தினசரி அவரிடம் வந்து கேட்டுக்கொள்ளலாம். பொதுமக்கள் தரும் புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அலைச்சல் இன்றி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் இந்த மாற்றம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story