எல்.ஐ.சி.யில் இருந்து பேசுவதாக கூறி மின்வாரிய அதிகாரியின் வங்கி கணக்கில் ரூ.1¾ லட்சம் அபேஸ்; விவசாயி ரூ.20 ஆயிரத்தை பறிகொடுத்தார்
எல்.ஐ.சி.யில் இருந்து பேசுவதாக செல்போனில் பேசி மின்வாரிய அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இதேபோல விவசாயி ரூ.20 ஆயிரத்தை இழந்துள்ளார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பசுபநாதன் (வயது 55). இவர் பாலையம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று மர்ம நபர் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு, எல்.ஐ.சி.யில் இருந்து அதிகாரி பேசுவதாக கூறி உங்களது வங்கி கணக்கில் காப்பீட்டு தொகையை அனுப்ப உங்களது வங்கி கணக்கு எண்ணை கொடுக்குமாறு கூறியுள்ளார். அவரும் அதனை நம்பி வங்கி கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். நம்பரை கூறியுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்ம நபர் அவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்துள்ளார். பசுபநாதனின் வங்கி கணக்கில் பணம் எடுத்த தகவல் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதே போன்று அருப்புக்கோட்டை அருகே கோனப்பனேந்தலை சேர்ந்த விவசாயி சிவநாராயணன் என்பவருக்கும் இதே போன்று தொலைபேசியல் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு எண்ணை பெற்று ஒரு சில மணி நேரத்திலேயே அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரத்தை லாவகமாக எடுத்துள்ளார்.
மின்வாரிய அதிகாரி மற்றும் விவசாயியிடம் ரூ.2 லட்சம் அபேஸ் செய்திருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.