முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஜனதா தளம்(எஸ்) தயார் மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி


முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஜனதா தளம்(எஸ்) தயார் மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 22 July 2019 3:29 AM IST (Updated: 22 July 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஜனதா தளம் (எஸ்) தயாராக இருப்பதாக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசியல் சிக்கல் குறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாங்கள் எந்த தியாகத்திற்கும் தயார், தற்போதைக்கு கூட்டணி அரசை காப்பாற்ற வேண்டும், இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். மும்பையில் தங்கியுள்ள எங்கள் எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள் என்று இன்னும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு திரும்புவார்கள்.

நாளை (இன்று) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெறும். முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க தயார் என்று ஜனதா தளம் (எஸ்) கூறியுள்ளது. சித்த ராமையா உள்பட யார் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டாலும் எங்களுக்கு சம்மதம் என்று கூறியுள்ளனர்.

தற்போதைக்கு கூட்டணி அரசை காப்பாற்றிக்கொள்வது தான் எங்களின் முதல் நோக்கம். நாளை (இன்று) நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story