காரைக்கால் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சொந்த செலவில் குளத்தை தூர்வாரினர்


காரைக்கால் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சொந்த செலவில் குளத்தை தூர்வாரினர்
x
தினத்தந்தி 22 July 2019 4:00 AM IST (Updated: 22 July 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தங்களது சொந்த செலவில், காரைக்கால் கீழகாசாகுடியில் உள்ள வாத்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட நீர்நிலைகளை பாதுகாக்கவும், தண்ணீரை சேமிக்கவும், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது குறித்து, கலெக்டர் விக்ராந்த்ராஜா அண்மையில் கூறுகையில், ஒவ்வொரு அரசுத் துறை ஊழியர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள குளங்களை தத்தெடுத்து தூர்வாரி சுற்றிலும் மரக்கன்றுகள் நட முன்வரவேண்டும் எனவும், இதற்கு பொதுமக்களும் தங்களால் முயன்ற ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தங்களது சொந்த செலவில், காரைக்கால் கீழகாசாக்குடியில் உள்ள வாத்துக்குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கினர். மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ் இந்த தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி குறித்து துணை ஆட்சியர் ஆதர்ஷ் கூறும்போது, “குளங்கள் தூர்வாருவதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவதோடு, தங்கள் பகுதி குளத்தை பாதுகாக்கவும் முன்வர வேண்டும். கழிவுகளை கலக்கச் செய்யாமலும், குப்பைகளை குளத்தில் கொட்டாமலும், தண்ணீரை சேமித்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல், காரைக்கால் திருமலைராயன்பட்டினம் மானாம்பட்டு வாய்க்கால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு, அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் (மார்க்) துறைமுகம் சார்பில் தூர்வாரப்படுகிறது. அதற்கான பணி நேற்று தொடங்கியது.

இந்த பணியை மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தொடங்கி வைத்து கூறியதாவது:-

ஒரு மாத காலத்தில் இந்த தூர்வாரும் பணி முடிவடையும். இதன் மூலம், விவசாய விளைநிலங்கள் பயன்பெறும். மேலும் காரைக்காலில் அமைந்துள்ள பிரதான வாய்க்கால் களும், தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்று குளங்கள், வாய்க்கால் தூர்வாரும் பணியில் அப்பகுதி பொதுமக்களும் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். என்றார். நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் ஆதர்ஷ், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., துறைமுக அதிகாரி ராஜேஸ்வரரெட்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story