முறையாக பராமரிக்கப்படாததால் மணப்பட்டு ஏரியில் இருந்து மழைநீர் வீணாக வெளியேறும் அவலம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


முறையாக பராமரிக்கப்படாததால் மணப்பட்டு ஏரியில் இருந்து மழைநீர் வீணாக வெளியேறும் அவலம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 22 July 2019 4:00 AM IST (Updated: 22 July 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே மணப்பட்டு ஏரி முறையாக பராமரிக்கப்படாததால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஏரிக்கு வந்த மழைநீர் வீணாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஏரியை உடனடியாக பராமரித்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாகூர்,

புதுச்சேரி மிகச் சிறிய மாநிலம் இங்கு ஆண்டு முழுவதும் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள பெரிய அணைக்கட்டுகள் எதுவும் இல்லை. நீர் ஆதாரத்திற்கு பருவமழையும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டை நம்பி தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

புதுவையில் மொத்தம் 84 ஏரிகள் மற்றும் ஏராளமான குளங்கள் உள்ளன. இவை அனைத்திலும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீர் வினியோகத்திற்கும், விவசாயத்திற்கும் போதுமானதாக இருந்து வந்தது. புதுச்சேரி நிலப்பரப்பு தாழ்வான பகுதியில் அமைந்து உள்ளது.

அதனால் மழைக் காலங் களில் தமிழகப் பகுதியான விழுப்புரம், கடலூர் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் ஏரி குளங்களுக்கு சென்று திரும்பும் வகையில் நீர்வரத்து வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. பாசன வாய்க்கால்கள், நீர்வரத்து வாய்க்கால்கள் மூலம் நீர் ஆதாரம் வீணாகாமல் சேமித்து பாதுகாக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சித்தேரி வாய்க்கால் மூலம் மணப்பட்டு ஏரிக்கு வந்த மழை நீர் வந்தது. அதே சமயம் மணப்பட்டு ஏரி மதகுகள் சரியாக பராமரிக்கப்படாததால் மழை நீர் வெளியேறி வீணாகி வருகிறது.

இந்நிலையில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஏரியை தூர்வாரி முறையாக பராமரிக்கவும் மழை நீர் வீணாகாமல் சேமித்து வைக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story