உசிலம்பட்டி,
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடி நீருக்காக பொதுமக்கள் அன்றாடம் போராடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்- அமைச்சர் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சி பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம்,சமுதாய கூடம், பழைய மற்றும் புதிய பேரூராட்சி அலுவலகம் ஆகிய பகுதியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பேரூராட்சிகளின் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன் ஆய்வு செய்தார். மேலும் எழுமலை அருகே அமைக்கப்பட்டுள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும் பேரூராட்சி பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளையும், 6-வது வார்டில் பழைய பேரூராட்சி அலுவலகம் அருகில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியையும் ஆய்வு செய்தார். தற்போது பருவமழை பெய்யஉள்ளதால் பேரூராட்சி பகுதி முழுவதும் உள்ள சாலையோரங்கள் மற்றும் வீடுகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உடன் பேரூராட்சிகளின் மதுரை மண்டல செயற் பொறியாளர் சுரேஷ்குமார், உதவி இயக்குனர் அலுவலக கணக்கர் செல்வக்குமார், எழுமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் அலுவலக பணியாளர்கள் சென்றனர்.