விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவ படையில் வேலை


விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவ படையில் வேலை
x
தினத்தந்தி 22 July 2019 9:37 AM GMT (Updated: 22 July 2019 9:37 AM GMT)

துணை ராணுவ படையில் விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்திய ராணுவம் தரைப்படை, கடற்படை, விமானப்படை எனும் முப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுடன் எல்லைக்காவல்படை, இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படை, தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை, அசாம் ரைபிள், சசாஸ்திரா சீமா பல் போன்ற துணை ராணுவ படைப்பிரிவுகளும் செயல்படுகின்றன.

தற்போது துணை ராணுவ பிரிவுகளில் ஒன்றான சசாஸ்திரா சீமா பல் படைப்பிரிவில் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. குரூப்-சி பிரிவின் கீழ் வரும் இவை பொதுப் பணியிடங்களாகும். மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விளையாட்டு வீரர்களுக்காக இந்த பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இவர்கள் தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றில் பங்கேற்றவராகவும், பதக்கம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். கால்பந்து, கூடைப்பந்து, ஆக்கி, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, தடகளம், ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ உள்ளிட்ட 16 போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு இந்த பணியிடங்களில் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்த்தல், விளையாட்டு சாதனைகள், தற்போதைய விளையாட்டு திறன் சோதனை, உடல் அளவு மற்றும் உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு 15-7-2019-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களை/ssb.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story