வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 28 பேர் போட்டி இறுதி பட்டியல் வெளியீடு


வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 28 பேர் போட்டி இறுதி பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 4:52 PM GMT)

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

வேலூர், 

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காட்பாடியில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதை தொடர்ந்து வேட்புமனுதாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடந்த 18-ந் தேதி வேட்புமனுதாக்கல் முடிவடைந்தது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 19-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. பரிசீலனை முடிவில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் ஆகியோர் மனுக்கள் உள்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர் மனுக்கள், குறைபாடு கண்டறியப்பட்ட மனுக்கள் என 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்களான ஜே.அசேன், ஏ.ஜி.சண்முகம், தனலட்சுமி ஆகிய 3 பேர் தங்களது மனுக்களை ‘வாபஸ்’ பெற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டது.

அதன்படி களத்தில் உள்ள வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)- அ.தி.மு.க.

2. டி.எம்.கதிர்ஆனந்த்- தி.மு.க.

3. தீபலட்சுமி-நாம் தமிழர் கட்சி.

4. ஜி.எஸ்.கணேசன்யாதவ்-பிரகதிஷில் சமாஜ்வாடி (லோகியா).

5. வி.சேகர்-ஆல்பென்ஷினர்ஸ் பார்ட்டி.

6. ச.திவ்யா-தேசிய மக்கள் கழகம்.

7. நரேஷ்குமார்-தமிழ்நாடு இளைஞர் கட்சி.

8. பேராயர் காட்பிரே நோபுள்-தேசிய மக்கள் சக்தி கட்சி.

9. மோகனம்-மறுமலர்ச்சி ஜனதா கட்சி.

10. விஜய் பவுல்ராஜா-ரிபப்ளிக்கன் சேனா.

மற்றும் சுயேச்சை வேட்பாளர்களாக 11. அக்னிராமச்சந்திரன், 12. ஆறுமுகம், 13. கே.கதிரவன், 14 .எம்.கதிரவன், 15. இ.கருணாநிதி, 16. ச.சண்முகம் 17. கே.சுகுமார், 18. பொ.செல்லபாண்டியன், 19. செல்வராஜ், 20. டேவிட், 21. தமிழ்செல்வன், 22. நூர்முகமது, 23. பத்மராஜன், 24. பலராமன், 25. முரளி, 26. ராஷீத் அகமத், 27. வெங்கடேசன், 28. ஜே.எஸ்.கே. ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது.

Next Story