வருங்காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் பணத்திற்கு மதிப்பு இருக்காது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு
வருங்காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் பணத்திற்கு மதிப்பு இருக்காது என்று நீர் மேலாண்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நேற்று ‘ஜல்சக்தி அபியான்’ நீர் மேலாண்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது குடிநீர் பிரச்சினை அதிகமாகி உள்ளது. மத்திய அரசின் ஆய்வின்படி இந்தியாவில் 527 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 சதவீதம் நிலத்தடி தண்ணீர் பிரச்சினை உள்ளது. நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மாசுபட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 180 நீர்நிலைகள் தன்னார்வலர்கள், இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள், வரத்து கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. சாக்கடை கலக்கப்படுவதால் சுத்தமான தண்ணீர் வருவதில்லை. இந்தநிலை நீடித்தால் நாளை குடிக்கவும், உபயோகத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.
ஒரு துளி நீர் சேமிப்பு, கோடிக்கணக்கான துளி நீர் சேமிப்பாகும். நாம் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான தண்ணீர் தேவை, உலகளவில் பார்க்கும் போது நாம் 50 சதவீதம் கூடுதலாக உபயோகப்படுத்தி வருகிறோம்.
ஒரு நாட்டின் சொத்து தண்ணீர் மட்டும் தான், நகை, பணம், பொருள் இல்லை. நமக்கு கிடைக்கும் ஒரு துளி தண்ணீர் பல்வேறு உழைப்பின் மூலம் நமக்கு கிடைக்கிறது. விவசாயத்தில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் மூலம் தண்ணீர் சேமித்து வேளாண்மை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உலகளவில் குறைந்த நீர் வளம் கொண்ட நாடு இஸ்ரேல், தற்போது வேளாண்மை பொருட்கள் உற்பத்தியில் உலகத்திற்கு முன்னோடியாக திகழ்கிறது. நீர் பாதுகாப்பு இல்லை என்றால் ஒரு காலத்தில் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகும். இதனை எல்லாம் சரி செய்வதற்காக மக்களிடம் எடுத்துச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் இயக்கம் மாநில அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தண்ணீரை சேமிக்கும், பாதுகாக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். நீர் நிலைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அரசு என்ன செய்தது என்று இல்லாமல், நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு வரும் செயல்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் இந்த கல்லூரியில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் விழிப்புணர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர் காலத்தின் சிறந்த பொருளாதாரம் நீர். இனி வரும் காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் பணத்திற்கு மதிப்பு இருக்காது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரூ.2,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்மோகன், அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story