சட்டக்கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி முன்னாள் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு


சட்டக்கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி முன்னாள் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 July 2019 11:15 PM GMT (Updated: 22 July 2019 5:02 PM GMT)

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற முன்னாள் காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த சுந்தரின் மகள் ரம்யா (வயது 23). இவர் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி காஜாமலையில் முஸ்லிம் 2-வது தெருவில் ஒரு வீட்டின் மாடியில் சக தோழிகளுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று பகலில் ரம்யா வீட்டில் இருந்தார். சக தோழிகள் 2 பேரும் அங்கிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் ஒருவர் வீட்டிற்கு வந்து ரம்யாவை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த வாலிபர் ஆத்திரத்தில் தான் மறைத்து பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை திடீரென ரம்யா மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச்சென்றார். இதனால் உடல் கருகிய நிலையில் ரம்யா அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தோழிகள் ஓடி வந்தனர். மேலும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பலத்த தீக்காயமடைந்த அவரை ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 6-வது தளத்தில் தீக்காய சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் ரம்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வெளியான தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

சட்டக்கல்லூரி மாணவி ரம்யா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சந்திரபாடியை சேர்ந்த தவச்செல்வன் (28) என்பவருடன் ஏற்கனவே பழக்கம் இருந்தது. இவர்களது பழக்கம் காதலாக மாறியது. தவச்செல்வன் திருச்சி அருகே தனியார் மோட்டார் வாகன ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில் தவச்செல்வன்-ரம்யாவின் காதலில் திடீரென பிளவு ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து குடும்பம் நடத்துமாறு ரம்யாவிடம் தவச்செல்வன் கேட்டிருக்கிறார். ஆனால் ரம்யா மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தவச்செல்வன் வீட்டிற்கு நேரடியாக வந்து ரம்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை கொலை செய்யும் நோக்கில் பெட்ரோலை ஒரு பாட்டிலில் ஏற்கனவே எடுத்து வந்து ரம்யா மீது ஊற்றி தீ வைத்து எரித்தது தெரியவந்தது. மேலும் வாக்குமூலத்தில் மேற்கண்ட தகவல்களை ரம்யா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய முன்னாள் காதலன் தவச்செல்வனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சட்டக்கல்லூரி மாணவி ரம்யாவின் குடும்பத்தினர் தகவல் அறிந்ததும் அவரை பார்ப்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை விரைந்து வந்தனர்.

இதற்கிடையில் மாணவி ரம்யாவுக்கு தெரிந்த வக்கீல்கள் நிருபர்களிடம் கூறுகையில், மாணவி ரம்யாவுக்கும், தவச்செல்வனுக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், ரம்யாவை அவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், தெரிவித்தனர்.

இதற்கிடையே ஒரு தனிப்படை போலீசார் நாகை மாவட்டத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். தவச்செல்வனை பிடித்து கைது செய்து அவரிடம் விசாரித்த பின்பு தான் மேலும் முழு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story