விவசாய கிணறுகளில் தண்ணீர் திருடி விற்பதை தடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை


விவசாய கிணறுகளில் தண்ணீர் திருடி விற்பதை தடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 July 2019 11:30 PM GMT (Updated: 22 July 2019 5:26 PM GMT)

காடையாம்பட்டி அருகே விவசாய கிணறுகளில் தண்ணீர் திருடி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் காடையாம்பட்டி அருகே உள்ள ராமமூர்த்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிராம தலைவர் ரத்தினவேல் தலைமையில் திரண்டு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமமான ராமமூர்த்திநகரில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் வறண்டு காணப்படுவதால் விவசாய தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலர் விவசாய கிணறு மற்றும் போர்வெல்லில் இருந்து தண்ணீரை திருடி, அதனை டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு சென்று, ஆலைகள், செங்கல் சூளைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விற்பனை செய்து வருகிறார்கள். அனுமதியின்றி இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தண்ணீர் திருடி விற்பதை தடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல், ஜலகண்டாபுரம் அருகே உள்ள சித்துரெட்டிவளவு, சத்யாநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சித்துரெட்டிவளவு, சத்யாநகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக காவிரி குடிநீர், சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்துகொடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறியிருந்தனர்.

மேலும், ஆத்தூர் தாலுகா மணிவிழுந்தான் அருந்ததியர் தெரு, எம்.ஜி.ஆர்.நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் குடியிருந்து வரும் பகுதிக்கு பட்டா கேட்டும், குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வளாகம் போன்ற வசதிகள் கேட்டும் மனுக்களை கொடுத்தனர்.

காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்து வரும் ஓவிய பயிற்றுனர் தங்கமுத்து கொடுத்த மனுவில், நான் கடந்த 8 ஆண்டுகளாக பள்ளியில் ஓவிய பயிற்றுனராக வேலை பார்த்துவருகிறேன். மாற்றுத்திறனாளியாகிய எனக்கு கடந்த 8 ஆண்டுகளாக சலுகைகள், விதிவிலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. எனது கோரிக்கைகளை பலமுறை பள்ளிகல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பகுதிநேர ஓவிய பயிற்றுனராக வேலை பார்த்து வரும் என்னை பணி நிரந்தரம் செய்து இந்த கல்வி ஆண்டு முழுவதும் பணி செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story