தூத்துக்குடி அருகே பயங்கரம் தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை காரை வழிமறித்து 5 பேர் கும்பல் வெறிச்செயல்


தூத்துக்குடி அருகே பயங்கரம் தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை காரை வழிமறித்து 5 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 July 2019 5:00 AM IST (Updated: 22 July 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே காரை வழிமறித்து தி.மு.க. பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 64). இவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தூத்துக்குடி யூனியன் தலைவராகவும் இருந்தார்.

இந்த நிலையில் கருணாகரன் நேற்று மாலையில் குலையன்கரிசலில் இருந்து திரவியபுரம் செல்லும் ரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு தனியாக காரில் சென்றார். அவர் தோட்டத்தை பார்வையிட்டு மீண்டும் காரில் வீட்டுக்கு திரும்பினார். மாலை 5.45 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவில் அருகே காரில் வந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் சுமார் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் திடீரென கருணாகரனின் காரை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரை நிறுத்தினார். பின்னர் அவரது காரை மர்ம கும்பல் சூழ்ந்தது.

அந்த கும்பல் கருணாகரனை காரில் இருந்து கீழே இறக்கி போட்டு தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கருணாகரன் பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டது. அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கருணாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பல் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

குலையன்கரிசல் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர் கருணாகரனுக்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அந்த தகராறு காரணமாக கருணாகரன் கொலை செய்யப்பட்டாரா?, அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கருணாகரனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

தூத்துக்குடி அருகே காரை வழிமறித்து தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story