பாளையங்கோட்டையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது


பாளையங்கோட்டையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 5:38 PM GMT)

பாளையங்கோட்டையில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டை தியாகராஜநகர் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 34). இவர் அங்குள்ள மெயின் ரோட்டில் வெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியானது.

இதை தொடர்ந்து அந்த சூப்பர் மார்க்கெட் வேலைக்கு ஆட்களை அனுப்பும் பணியை சுரேஷ்குமார் மேற்கொண்டார். அப்போது நெல்லை, குமரி மாவட்டங்களை சேர்ந்த பல இளைஞர்கள் இவரை தொடர்பு கொண்டனர்.

பின்னர் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது அங்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பலரிடம் வசூலித்ததாக தெரிகிறது. ஆனால் இதில் 15 பேரை மட்டுமே பிரேசில் நாட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து பணம் செலுத்திய மற்றவர்கள் சுரேஷ்குமாரை தொடர்பு கொண்டு தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். ஆனால் அவர் திரும்ப கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்த அன்பரசு (வயது 32) என்பவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரனிடம் புகார் அளித்தார். இதேபோல் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராபின்சன், ஜெபசீலன், சங்கர், வினோத், பாளையங்கோட்டை சிவந்திபட்டியை சேர்ந்த கருப்பசாமி ஆகியோரும் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெரியசாமி விசாரணை நடத்தினார். இதில் புகார் அளித்த 6 பேரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷ்குமார், அவருடைய மனைவி தெய்வானை, நண்பர் யோவான் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் சுரேஷ்குமாரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதைபோல் இவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மேலும் 40 பேரிடம் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்திருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்டவர் கள் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும் மாநகர குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story