விக்கிரமசிங்கபுரத்தில் ரூ.25 லட்சம் மோசடி; மகளிர் குழு தலைவி கைது


விக்கிரமசிங்கபுரத்தில் ரூ.25 லட்சம் மோசடி; மகளிர் குழு தலைவி கைது
x
தினத்தந்தி 23 July 2019 3:30 AM IST (Updated: 22 July 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் ரூ.25 லட்சம் மோசடி செய்த மகளிர் குழு தலைவியை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிவாசல் மேல தெருவில் வசித்து வந்தவர் பேரியா மனைவி ஆபிதா (வயது 37). அப்பகுதி மக்களிடம் நன்றாக பழகி வந்த இவர், மகளிர் குழு ஒன்றை தொடங்கினார். அதற்கு தலைவியாக இருந்து, அங்குள்ளவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் ஒரு சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய பணத்தேவைக்காக அங்குள்ள சுமார் 30 பேரை மகளிர் குழுவில் சேர்த்துள்ளார். அவர்களும் தங்கள் பெயரில் கடன் வாங்கி ஆபிதாவிடம் கொடுத்துள்ளனர். இதற்காக கடன் வாங்கி கொடுத்தவர்களிடம், நான் உங்களுடைய கடனை செலுத்திவிடுவேன் என்று கூறி, கடன் வாங்கி கொடுத்தவர்கள் சிலருக்கு அன்பளிப்பாக சிறு தொகையை ஆபிதா கொடுத்துள்ளார். அவர்கள் பெயரில் வாங்கிய கடனுக்கு உண்டான தவணை தொகையை ஒரு சிலருக்கு குறிப்பிட்ட தேதிக்கு கட்டி வந்துள்ளார்.

இந்தநிலையில் ஒரு கால கட்டத்தில் கடன் வாங்கிய நிறுவனத்தில் தவணை செலுத்த முடியாமல் போகவே, ஆபிதா தலைமறைவானார். இதனால் அந்த நிறுவனத்தினர், அந்தந்த பெயர்களில் உள்ள முகவரிக்கு சென்று கடன் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு அவர்கள், கடன் எங்கள் பெயரில் இருந்தாலும், குழு தலைவியான ஆபிதா தான் பணத்தை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த நிறுவனம், கடன் உங்கள் பெயரில் இருப்பதால் அதற்கு நீங்கள் தான் முழு பொறுப்பு என நெருக்கடி கொடுத்தது.

இதற்கிடையே தலைமறைவான ஆபிதா, தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் தெருவில் பெற்றோருடன் வசிப்பதாக இப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி, ஆபிதாவை விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆபிதாவிடம் விக்கிரமசிங்கபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆபிதா மகளிர் குழு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் மேல பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பக்கீர் கனி மனைவி செய்யது அலி பாத்திமா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபிதாவை கைது செய்தனர்.

Next Story