சேலம் மாவட்ட மக்களை திருப்திப்படுத்த டெல்டா விவசாயிகளை பழிவாங்குவதா? எடப்பாடி பழனிசாமிக்கு பழனிமாணிக்கம் எம்.பி. கண்டனம்


சேலம் மாவட்ட மக்களை திருப்திப்படுத்த டெல்டா விவசாயிகளை பழிவாங்குவதா? எடப்பாடி பழனிசாமிக்கு பழனிமாணிக்கம் எம்.பி. கண்டனம்
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 6:30 PM GMT)

8 வழிச்சாலை திட்டத்தால் அதிருப்தியில் உள்ள சேலம் மாவட்ட மக்களை திருப்திப்படுத்துவதற்காக, மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை அறிவித்து டெல்டா விவசாயிகளை பழிவாங்குவதா? என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

காவிரி நீர் என்பது காலம், காலமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியில் நடந்த அரசு விழாவில், மேட்டூர் அணையின் உபரி நீர் வீணாக கடலில் கலக்காமல் இருப்பதற்காக அந்த நீரை 100 ஏரிகளில் நிரப்ப ரூ.565 கோடியில் திட்டம் உருவாக்கப்படும் என கூறியிருப்பது டெல்டா மாவட்ட மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு என்ன காரணத்தை கூறுகிறதோ, அதே காரணத்தை முதல்-அமைச்சர் கூறுகிறார். இது காவிரி பாசன பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களை மறைமுகமாக வஞ்சிப்பதாக உள்ளது. இந்த 5 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை முறையாக தூர்வார நடவடிக்கை எடுத்தாலே, உபரி நீரை சேமிக்க முடியும். வடகிழக்கு பருவகாலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும்.

காவிரி டெல்டா விவசாயிகளை கர்நாடகம் வஞ்சிப்பதைபோல தமிழக முதல்-அமைச்சரும் தான் பொறுப்பேற்ற பிறகு இன்னொரு கோணத்தில் வஞ்சிப்பதாக உள்ளது. காவிரி நடுவர் மன்ற வழிகாட்டு நெறிமுறைகளை முதல்-அமைச்சரே மீறினால் அது மறைமுகமாக கர்நாடகம் மீறுவதற்கு உதவியாக அமைந்துவிடும்.

மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்புவது என்பது காவிரி பாசனத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய பாசன திட்டம் உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இது காவிரி பாசன பகுதியை மறைமுகமாக பாலைவனமாக மாற்றுவதற்கும், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு உதவுவதாகவும் உள்ளதாக விவசாயிகள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது.

எனவே இந்த திட்டத்தை கைவிட்டு ரூ.565 கோடியை தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு பயன்படுத்தினால் அவரது உயர்ந்த நோக்கம் நிறைவேறும். இதன்மூலம் காவிரி நீர் ஒரு சொட்டு கூட வீணாகாது. முதல்-அமைச்சர் மேட்டூர் அணை நீர் பகிர்வு கொள்கையை கையாளும் முறையே விவசாயிகளின் உரிமையை சிதைப்பதாக உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 28-ந் தேதி மேட்டூர் அணை மூடப்பட்ட பிறகு, அவசியத்தின் அடிப்படையில் ஓரிரு முறை மட்டுமே அணை திறக்கப்படும். ஆனால் முதல்-அமைச்சர் தனது தொகுதி என்பதால் வாய்க்காலில் நாள்தோறும் 1,000 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளார். மேட்டூர் அணை நிர்வாகம் தஞ்சை மாவட்ட கலெக்டரிடமும், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரிடமும் இருந்தது.

ஆனால் இப்போது மேட்டூர் அணையின் நிர்வாகம் முதல்-அமைச்சரின் சிறப்பு பிரிவுக்கு மாறிவிட்டது. மேட்டூர் அணையை திறப்பது குறித்த முடிவை அவரே மேற்கொள்கிறார். பழைய முறைப்படி மேட்டூர் அணை நிர்வாகத்தை தஞ்சை மாவட்ட கலெக்டரிடமும், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடமும் ஒப்படைக்க வேண்டும்.

8 வழிச்சாலை திட்டத்தால் சேலம் மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை மறைத்து, அவர்களை திருப்திப்படுத்த்துவதற்காக டெல்டா மாவட்ட விவசாயிகளை பழிவாங்கும் விதமாக முதல்-அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story