கயத்தாறு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


கயத்தாறு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 23 July 2019 3:45 AM IST (Updated: 23 July 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 27) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி மகள் கிருஷ்ணவேணி (23). பட்டதாரியான இவருக்கும், மாடசாமிக்கும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகன் பிரதீப் (2½). திருமணத்துக்கு பின்னர் கிருஷ்ணவேணி தன்னுடைய கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணவேணி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் அங்குள்ள கோவிலில் கொடை விழா நடந்தது. கிருஷ்ணவேணிக்கு வயிற்று வலி இருந்ததால், அவர் கோவிலுக்கு செல்லவில்லை. எனவே மாடசாமி மட்டும் தனியாக கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணவேணி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலையில் மாடசாமி தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது, அங்கு மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த கிருஷ்ணவேணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3½ ஆண்டுகளில் கிருஷ்ணவேணி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story