குன்னத்தூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் பெண் சாவு; கடைசி பயணத்திலும் பிரியாத தம்பதி


குன்னத்தூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் பெண் சாவு; கடைசி பயணத்திலும் பிரியாத தம்பதி
x
தினத்தந்தி 23 July 2019 4:45 AM IST (Updated: 23 July 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் பெண் மயங்கி விழுந்து இறந்தார். கடைசி பயணத்திலும் இணை பிரியாத தம்பதியை நினைத்து கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

குன்னத்தூர்,

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி புஷ்பாத்தாள் (60). இவர்களது மகள் செல்வி(35). இவருக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சின்னச்சாமிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.

உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குன்னத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவர் இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குக்காக உறவினர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் கணவர் இறந்ததை அறிந்து அவருடைய மனைவி புஷ்பத்தாள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட கணவரின் உடலில் விழுந்து அவர் கதறி அழுதார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடனே அங்கு நின்றிருந்த உறவினர்கள் புஷ்பத்தாளை தூக்கி தண்ணீரை தெளித்தனர். ஆனால் அவர் எழுந்திரிக்கவில்லை. அவரும் இறந்தது விட்டது தெரிய வந்தது. இதனால் அவரது மகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி அறிந்த அந்த கிராமத்தினர் சாவிலும் இணை பிரியாத தம்பதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களும் கோபிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story