தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை: அணைகளின் நீர்மட்டம் குறைந்ததால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்


தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை: அணைகளின் நீர்மட்டம் குறைந்ததால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 23 July 2019 4:15 AM IST (Updated: 23 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் நீலகிரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மஞ்சூர்,

தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், சமவெளியை நோக்கி பாயும் ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. இதற்காக இங்கு ஏராளமான அணைகள் உள்ளன. அந்த அணைகளில் இருந்து மின்உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா மற்றும் பைக்காரா நீர்மின் திட்டங்கள் மூலம் குந்தா, அவலாஞ்சி, கெத்தை, பரளி, பில்லூர், காட்டுக்குப்பை உட்பட 12 நீர் மின்நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இதில் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்தி மந்து, பார்சன்ஸ் வேலி, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்கண்ட மின்நிலையங்களில் தினமும் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழை தவறாமல் பெய்து விடுகிறது. இந்த பருவமழையின் போது ஆறுகள், நீரோடைகள், சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். குறிப்பாக எமரால்டு அணையை எடுத்துக்கொண்டால் போர்த்தி ஆடா நீர்பிடிப்பு பகுதி வரையில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும்.

இந்த அணையை சுற்றிலும் மரங்கள் அதிகமாக இருப்பதால் பார்க்கவே அழகாக இருக்கும். இந்த இயற்கை எழில் கொஞ்சும் கண்கொள்ளா காட்சியை காண சுற்றுலா பயணிகள் பலர் வந்து ரசித்து விட்டு செல்வது வழக்கம்.

ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும் என்பதால், இந்த அணைகளில் தண்ணீர் ததும்பி அழகாக காட்சியளிக்கும். ஆனால் இந்த ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் கோடைமழை பொய்த்துபோனது.

தென்மேற்கு பருவமழையும் சரிவர பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. போர்த்தி ஆடா நீர்ப்பிடிப்பு பகுதியில் எப்போதுமே தண்ணீர் இருக்கும். தற்போது இங்கும் தண்ணீர் இல்லாததால், அந்தப்பகுதி அணை இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் புல்தரை மட்டுமே தெரிகிறது.

அதுபோன்று எமரால்டு அணையின் நீர்மட்டம் 184 அடி ஆகும். இந்த அணையிலும் தற்போது 80.5 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதுபோன்று பைக்காரா, குந்தா, அவலாஞ்சி, காட்டுக்குப்பை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் குறைந்துவிட்டது.

இந்த நிலை நீடித்தால் விரைவில் மின்உற்பத்திக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

எனவே நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ய விவசாயிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆங்காங்கே மழைவேண்டி பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடத்தி வருகிறார்கள். எனவே கண்டிப்பாக இந்த ஆண்டில் மழை பெய்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்து இருக்கிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மிக குறைவாக இருக்கிறது. பருவமழை காலங்களில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும். அண்டை மாநிலமான கேரளாவில் மழை வெளுத்து வாங்குகிறது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. எனவே விரைவில் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம் என்றனர்.

Next Story