கட்டபெட்டு கிராமத்தில் மதுக்கடையை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை


கட்டபெட்டு கிராமத்தில் மதுக்கடையை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 July 2019 4:30 AM IST (Updated: 23 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

கட்டபெட்டு கிராமத் தில் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி நீலகிரி நாக்குசீமை படுகர் இளைஞர் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், ஊட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த முக்கிமலை கிராமத்தை சேர்ந்த பிரகா‌‌ஷ் என்பவரை சிலர் தாக்கி உள்ளனர்.

இதற்கு அ.தி.மு.க. பிரமுகர் மோகன் துணையாக இருந்து தாக்கி உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுவரை பிரகாசை தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. நீலகிரி மக்கள் தொகுதி இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ் அளித்த மனுவில், கூடலூர் பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் அரசு மற்றும் செக்‌‌ஷன் 17 நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். குறிப்பாக ஓவேலி பகுதியில் பழங்குடியின மக்களின் நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள்.

அங்கு அனுமதியின்றி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் வண்டிப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தினமும் மாலை இளைஞர்களுக்கு கைப்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மைதானத்தில் கைப்பந்து பயிற்சி அளிக்கக்கூடாது என்று கூறியதால், கடந்த சில மாதங்களாக பயிற்சி அளிக்க முடியவில்லை. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி மீண்டும் மாலை நேரங்களில் பள்ளிக்கோ, பள்ளி ஆசிரியர்களுக்கோ, குழந்தைகளுக்கோ இடையூறு இல்லாமல் கைப்பந்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஊட்டி அருகே கட்டபெட்டு கிராம மக்கள் அளித்த மனுவில், கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மதுக்கடை குடியிருப்புகள் அருகே செயல்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் அந்த வழியாக நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மதுபிரியர்கள் குடித்து விட்டு தகாத வார்த்தைகளை பேசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 212 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் திறன் விழிப்புணர்வு வார நிகழ்ச்சி தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதியோர் உள்ளிட்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை பயனாளிகளிடம் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story